Tuesday, January 06, 2009

504. அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான - TPV22

திருப்பாவை இருபத்திரண்டாம் பாடல்

விழித்தெழுந்து, செந்தாமரைக் கண்களால் எங்களை நோக்கலாகாதா?

யமுனா கல்யாணி ராகம், மிச்ரசாபு தாளம்

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.


பொருளுரை:
"அழகிய பரந்த பூவுலகை ஆண்ட மன்னர்கள், தமக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என்ற அகந்தையும் தற்பெருமையும் அழிக்கப்பட்டு, உன்னிடம் வந்து உன் அரியணையின் அருகே பணிவுடன் குழுமியிருப்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைந்தோம்!

சலங்கை மணிகளை போன்ற, பாதி திறந்த, தாமரை மலர்களை ஒத்த உன் அழகிய சிவந்த கண்களை சிறிது எம் பக்கம் திருப்பி அருள் செய்யலாகாதா ? குளிர்ந்த சந்திரனும், வெப்பம் தரும் சூரியனும் ஒரு சேர உதித்ததற்கு நிகரான அக்கண்களின் பார்வை எங்கள் மேல் விழுமாகில், எங்களின் சாபங்களும் பாபங்களும் ஒழிந்து போய் விடும்.


பாசுரச் சிறப்பு:

எல்லாரும் துயிலெழுந்து விட்டனர். ஆனால், பரமனாகிய கண்ணபிரான் இன்னும் துயிலெழவில்லை! அடுத்த பாசுரத்தில் தெளிவாக உறக்கம் விட்டு எழுந்து விடுவான் :)

இப்பாசுரமும் சரணாகதித்துவத்தையே பறைசாற்றுகிறது. இதுவரை தம் சொத்து, தம் மக்கள், தம் நாடு என்றெல்லாம் அபிமானித்துக் கொண்டிருந்த, மிகுந்த வலிமை வாய்ந்த, சிற்றரசர்களும் பேரரசர்களும் தமது சுயம் அழிந்து கண்ணனிடம் வந்து சேர்ந்தது போல், கோபியரும் தங்களின் கையறு நிலையை முழுமையாக உணர்ந்து, தாங்கள் இதுவரை சம்பாதித்துள்ள தீவினைகளையும், சாபங்களையும் போக்க வல்லவன் கண்ணனே என்று உறுதியாக நம்பி, அவனைச் சரண் அடைகின்றனர். இது நிபந்தனையற்ற பரிபூர்ண சரணாகதி !!!

"போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்" என்று 5-ஆம் பாசுரத்தில் பாடியதை, ஆண்டாள் "திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்" என்று இன்னும் சற்று ஆணித்தரமாகச் சொல்கிறார்!

ஆண்டாள் "அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிருப்பார் போல்" என்று பாடும்போது, மகாபாரத யுத்தத்திற்கு முன்னால் கண்ணனின் உதவியை நாடி வந்த கௌரவ பாண்டவர், கண்ணன் துயில் விட்டு எழுவதற்காக அவன் கட்டிலுக்கு அருகே, காத்திருந்த காட்சி மனதில் விரிகிறது இல்லையா! "முப்பத்து மூவர் அமரர்க்கு" பாசுரத்தில், ஆண்டாள் தேவர்கள், தங்களுக்கு காரியம் ஆக வேண்டி கண்ணனிடம் வருவதைக் குறிப்பில் சொல்லி, கோபியருக்கோ கண்ணனைத் தவிர வேறொன்றும் தேவையில்லை என்கிறாள். இப்பாசுரத்தில், பூவுலகச் சக்ரவர்த்திகளும் தேவர்களை போலத் தான் என்று குறிப்பில் உணர்த்துகிறார் :-)


அதாவது, தேவர்களும் மன்னர்களும் வேறு வழியின்றி கண்ணனிடம் வந்து நின்றார்கள். ஆனால், கோபியருக்கோ "வழியே" கண்ணன் தான்! கண்ணனின் "செந்தாமரை கடைக்கண்" பார்வை தான் கோபியர் வேண்டுவது. அப்பார்வையின் அருளே அவர்களின் (இன்னும் மிச்சமிருக்கிற) அஞ்ஞானம், உலக பந்தங்கள் ஆகிய பாவங்களை தொலைத்து விடும் சக்தி உடையது! "சாபம் இழிந்தேலோர்" என்கிறாளே கோதை நாச்சியார். கண்ணனுடன் ஆய்ப்பாடியில் வாழ்ந்த கோபியருக்கு ஏது சாபம் ??? தன்னிலை உணர்ந்த பின் கண்ணனைப் பிரிந்திருப்பதே சாபம் - "அந்த சாபத்தைப் போக்கி எங்களை உன்னோடு சேர்த்துக் கொள்" என்று கோபியர் பக்தியில் உள்ளம் கரைய விகசித்து நிற்கின்றனர்.

கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!


என்ன ஒரு ரசமான ஒப்பு நோக்கல் பாருங்கள்! இப்படித் தானே திருப்பாணாழ்வாரும் "கரியவாகி புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே" என்று பரமனின் விழியழகை சிலாகித்து தன்னிலை மறந்து உருகி நின்றார், அரங்கனை தரிசத்தவுடன்!

"செங்கண் 'சிறுச்சிறிதே' எம்மேல் விழியாவோ!" என்று ஆண்டாள் சொல்வதிலும் ஒரு ரசம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதாவது 'மெல்ல மெல்ல' கண் விழித்து கண்ணன் தங்களை நோக்க ஆண்டாள் வேண்டும்போது, அவன் விழியழகை நிறைய நேரம் பருகக் கிடைக்கும் இன்பத்தையும், (தங்களின் அவசரம் காரணமாக!) துயிலெழும் கண்ணனுக்கு அசௌகரியம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தையும் அழகாக ஆண்டாள் வெளிப்படுத்தியிருக்கிறாள், இல்லையா!

பரமனின் திருக்கண்களானது, அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! பொதுவாக ஆழ்வார்கள் அனைவருமே திருமாலின் சிவந்த பெரிய அழகிய கண்களின் காதலர்களாகவே இருந்தார்கள்! அதனாலேயே அவை திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன !

கண்ணனின் மிகச் சிறந்த அடியவரை துயிலெழுப்பி, நந்தகோபர், யசோதா ஆகியவரின் ஆச்சார்ய உபதேசங்களை கடந்து, பின் நப்பின்னை பிராட்டியின் அருளையும் புருஷகாரத்தையும் பெற்று, இப்போது அடியவர் கூட்டத்தோடு கண்ணனைச் சரண் புகுந்து, அவனுடன் ஒன்றறக் கலப்பதற்கு வேண்டிய ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து விட்ட கோபியர் முக்தியின் கடைநிலையில் நிற்கின்றனர்! அடியவரோடு கூட்டாக சரண் புகுவது என்பது வைணவத்தின் ஓர் உயரிய கோட்பாடு என்பதை அறிக!

அபிமான பங்கமாய் வந்து - மாந்தரிடம் எட்டு வகையான மாயைகள் அல்லது குற்றங்கள் (அபிமானங்கள்) இருப்பதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார்:

1. உடலும் ஆத்மாவும் ஒன்றே என்பது
2. நம்மால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது
3. பரமனை விடுத்து வேறு ஒருவருக்கு நாம் கீழ்பணிந்தவர் என்ற எண்ணம்
4. நம்மைக் காக்க/உய்வு தர ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு அனுகூலர்களாலும் (நற்சுற்றம்) முடியும் என்ற எண்ணம்
5. சரணாகதி மற்றும் பக்தி என்ற வழிகளைத் தவிர்த்து வேறு வழிகளில் முக்தி பெற முடியும் என்ற மாயை.
6. (அழியக் கூடிய) சிற்றின்ப சுகங்களின் மீது ஆசைப்படுவது
7. நம் சக்தியே நம்மைச் செலுத்துகிறது என்ற மாயை
8. அடியவருக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது

மேற்கூறிய எட்டிலிருந்து விடுபட்டு நிற்பவரே, பரமனுக்கு உகந்த அடியார்க்கு அடியார் ஆவர்!

இன்னொரு விதத்தில், அபிமானம் அகங்காரத்தை (அகந்தை) குறிப்பதாம். இந்த (22வது) பாசுரம் அபிமான பங்கத்தை பற்றிப் பேசுகிறது. தத்வங்களின் வரிசையில் அகங்காரம் என்பது 22வது தத்வம் என்பது குறிப்பிடவேண்டியது.

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் - ஆண்டாள் பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது, அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம். இதைத் தானே, "முப்பத்து மூவர்" பாசுரத்திலும் "செப்பமுடையாய்! திறலுடையாய்" என்று ஆண்டாள் போற்றிப் பாடுகிறார்!

முதல் பாசுரத்தில் வரும், "கதிர்மதியம் போல் முகத்தான்" என்ற பதமும் பரமனின் இந்த இருநிலைத் தன்மையையே குறிக்கிறது! நம்மாழ்வாரும், "உளனென இலனென அவை குணமுடைமையில் உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே" என்று திருவாய்மொழியில் அருளியிருக்கிறார்!

அங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல் - கோபியர் பரமனை இரு கண்களைக் கொண்டு தங்களை பார்க்கச் சொல்வதிலும் ஒரு உள்ளர்த்தம் உள்ளது. அவர்கள் அவனது பரிபூர்ண அருளை வேண்டி நிற்கின்றனர், அதுவே "விஷ்ணோ கடாட்சம்" !! குளிர்ச்சியான கண் ஞானத்தை பெருக்க வல்லது, வெப்பம் தரும் கண் அஞ்ஞான இருளை விலக்க வல்லது!

அடுத்த பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்) கண்ணன் விழித்தெழ, கோபியர் அவனை உடனே சிம்மாசனத்தில் (கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து!) ஏற்றி விடுகிறார்கள் :-)

இறுதியாக, திருப்பாவையின் 22வது பாசுரத்தை தினமும் ஓதினால், நாம் செய்த பாவங்கள் அத்தனையும், பரமனின் திருவருளால் கரைந்து போய் விடும் என்று வைணவப் பெருந்தகைகள் சொல்லிச் சென்றுள்ளனர்.

எ.அ.பாலா

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

உயிரோடை said...

//"செங்கண் 'சிறுச்சிறிதே' எம்மேல் விழியாவோ!" என்று ஆண்டாள் சொல்வதிலும் ஒரு ரசம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதாவது 'மெல்ல மெல்ல' கண் விழித்து கண்ணன் தங்களை நோக்க ஆண்டாள் வேண்டும்போது, அவன் விழியழகை நிறைய நேரம் பருகக் கிடைக்கும் இன்பத்தையும்,//

என்ன ஒரு சிந்தனை. கோதைக்கு மட்டுமில்லை :) அதை சொல்லும் உங்களுக்கும் தான்

//எட்டு வகையான மாயைகள் அல்லது குற்றங்கள் (அபிமானங்கள்) இருப்பதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார்://
அருமையான விளக்கங்கள்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails